
சுமார் நாலு நூற்றாண்டுகளுக்கு முன்னர் காஞ்சிபுரம் அருகில் நடந்ததாக நம்பப்படும் கதை. மங்கம்மாள் என்பவரும் அவர் கணவர் மங்கபதி என்பவரும் காஞ்சிபுரம் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசித்து வந்த அன்பான தம்பதிகள். மங்கபதி அவர்களின் பங்காளிகள் அவரது செல்வச் செழிப்பையும், வளமான வாழ்க்கையையும் கண்டு பொறாமை கொண்டார்கள். சூழ்ச்சி செய்து மங்கபதி அவர்களை ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் கொலை செய்தார்கள்.
இடுகாட்டில் மங்கபதியின் உடல் எரிக்கப்படும்போது அவரது துணைவியார் மங்கம்மாள் "தன் கணவரின் மரணத்துக்கு காரணமானவர்களை பழிவாங்குவேன்" என்று சபதம் ஏற்று கணவரின் சிதையில் உடன்கட்டை ஏறினார். ஜோதியாக மறைந்ததாகவும் சொல்கிறார்கள். மூடநம்பிக்கைகள் மலிந்திருந்த அந்த காலக்கட்டத்தில் உடன்கட்டை என்பது சமூகத்தில் அத்தியாவசியமானதாக கருதப்பட்டதும் மக்களால் சகஜமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுமாக இருந்திருக்கிறது.
மங்கம்மாள் - மங்கபதி இறந்த சில காலத்திற்குள்ளாகவே மங்கபதியை கொலை செய்த அவரது பங்காளிகள் ஒவ்வொருவராக அனைவருமே ஏதோ ஒரு முறையில் உயிரிழந்திருக்கிறார்கள். மங்கம்மாளின் உடன்கட்டை சபதமும் நிறைவேறியிருக்கிறது.
இச்சம்பவம் நிகழ்ந்து பல வருடங்கள் கழித்து காஞ்சிபுரத்துக்கு சில வணிகர்கள் வந்திருக்கிறார்கள். முத்து மற்றும் தங்க வியாபாரிகளான அவர்கள் காஞ்சிபுரத்தில் வந்த வேலையை முடித்து விட்டு மேற்குப் பக்கமாக பயணம் செய்திருக்கிறார்கள். பணம் கொழிக்கும் வியாபாரம் செய்யும் இதுபோன்ற வியாபாரிகளை குறிவைத்து கொள்ளைக்காரர்கள் கொள்ளை நடத்துவது வழக்கமே.
இரவுவேளை ஆகிவிட்டதால் எங்கேயாவது பாதுகாப்பாக தங்கவேண்டும் என்று அந்த வியாபாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் பார்வையில் விளக்கெரிந்த ஒரு குடிசை தென்பட்டதாம். அந்த குடிசைக்கு சென்றவர்கள் அங்கிருந்த மஞ்சள் சேலை அணிந்த அம்மையார் ஒருவரிடம் தங்கள் நகை மூட்டையை கொடுத்து இன்று ஒரு இரவு மட்டும் குடிசைக்குள் வைத்து பாதுகாக்கும்படி வேண்டியிருக்கிறார்கள். அந்த அம்மையாரும் இவர்கள் வேண்டுகோளை ஏற்று இவர்கள் பசியாற உணவு படைத்து, தங்குவதற்கு திண்ணையில் போதிய இடவசதியும் செய்து தந்திருக்கிறார்.
பயண அலுப்பில் இருந்த வியாபாரிகள் அங்கேயே உறங்கி விட்டிருக்கிறார்கள். பொழுது விடிந்திருக்கிறது. கண்மலர்ந்த வியாபாரிகள் தாங்கள் ஒரு இடுகாட்டின் மத்தியில் படுத்திருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். தங்கள் நகை மூட்டை எங்கே என்று அச்சப்பட்டவர்கள் அது தங்கள் தலைக்கு அருகே பத்திரமாக இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.
இரவு தங்களை உபசரித்த அம்மையாரும், தங்கியிருந்த குடிசையும் எங்கே என்று குழம்பித் தவித்திருக்கிறார்கள். அருகிலிருந்த கிராமத்தில் சென்று விசாரித்தவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஒரு வழியாக வியாபாரத்தை முடித்து அந்த வியாபாரிகள் குழப்பமான மனநிலையுடனேயே ஊர் திரும்பினார்கள்.
சில நாட்கள் கழித்து அந்த வியாபாரிகளில் ஒருவரின் கனவில் அதே மஞ்சள் சேலை அம்மையார் வந்து தன் பெயர் மங்கம்மாள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தன்னுடைய கதையை சொல்லியிருக்கிறார். தான் அந்த இடுகாட்டில் இருந்துகொண்டே அந்த கிராம மக்களுக்கு அருள்பாலிப்பதாகவும் தனக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கனவினை நம்ப முடியாமல் குழம்பிப்போன அந்த வியாபாரி சக வியாபாரிகளுடன் இவரது கனவை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். வியாபாரிகள் மொத்தமாக சேர்ந்து அதே கிராமத்துக்குச் சென்று இந்த கனவினைப் பற்றி கிராமப் பெரியவர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். அந்த கிராமப் பெரியவர்களும் இந்த சம்பவம் நடந்ததை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
அதன்பிறகு வியாபாரிகள் ஒன்று சேர்ந்து இடுகாடு என்று சொல்லப்பட்ட அந்த இடத்தில் "தீப்பாய்ந்த மங்கம்மாளுக்காக" ஒரு கோயில் கட்டியிருக்கிறார்கள். வேகவதி ஆற்றங்கரையின் மேற்கே திருப்பருத்திக்குன்றம் என்ற கிராமத்தில் அமைந்த அந்தக் கோயிலில் இன்னமும் மங்கம்மாள் தன் பக்தர்களுக்காக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். ஆண்டாண்டு ஆடி மாதம் மங்கம்மாள் கோயிலில் கூழ் ஊற்றப்படுகிறது. வருடாவருடம் சித்திரை பவுர்ணமி அன்று திருவிழா நடைபெறுகிறது.
மங்கம்மாளை தங்கள் குலதெய்வமாக இன்றும் வழிபட்டுவருபவர்கள் யார் தெரியுமா? மங்கம்மாளால் பழிவாங்கப்பட்ட அவரது பங்காளிகளின் வம்சாவழியினர் தான். தங்கள் குழந்தைகளின் முடியைக் காணிக்கையாக கொடுத்து காதுகுத்துதலை தங்கள் குலதெய்வத்தின் கோயிலில் தான் அந்த சமூகத்தினர் செய்வார்கள்.
"தீப்பாய்ந்த" என்ற வார்த்தை சட்டவிரோதமானது என்று அந்த சமூகத்தின் இளையதலைமுறையினர் கருதியதால் தற்போது "தீப்பாய்ந்த மங்கம்மாள் ஆலயம்" என்பதை மாற்றி "ஸ்ரீமங்கம்மாள் ஆலயம்" என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள். இந்த ஆலயத்தைப் பற்றிய செய்திகள் சமீபத்தில் ராணி வார இதழ் மற்றும் தினமலர் வாரமலரில் வெளிவந்திருக்கிறது.
-கட்டுரையாளர் திரு.லக்கிலுக்
Sunday, November 26, 2006
நம் மண்ணின் சாமிகள் - தீப்பாய்ந்த மங்கம்மாள்
Posted by
திராவிட தமிழர்கள்
at
3:22 PM
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
// "தன் கணவரின் மரணத்துக்கு காரணமானவர்களை பழிவாங்குவேன்" //
// அந்த அம்மையாரும் இவர்கள் வேண்டுகோளை ஏற்று இவர்கள் பசியாற உணவு படைத்து, தங்குவதற்கு திண்ணையில் போதிய இடவசதியும் செய்து தந்திருக்கிறார்.
//
// சில நாட்கள் கழித்து அந்த வியாபாரிகளில் ஒருவரின் கனவில் அதே மஞ்சள் சேலை அம்மையார் வந்து தன் பெயர் மங்கம்மாள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தன்னுடைய கதையை சொல்லியிருக்கிறார். தான் அந்த இடுகாட்டில் இருந்துகொண்டே அந்த கிராம மக்களுக்கு அருள்பாலிப்பதாகவும் தனக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.//
கேள்விகள்:
1. கோவில் கேட்ட அம்மையார், ஏன் அந்த இரவிலேயெ அதை கேட்காமல் பிறகு கனவில் வரவேண்டும்?
2. குடிசையும் உணவும் தயாரிக்க முடிந்த மங்கம்மாவால், ஏன் தனக்கே கோவில் கட்டிக் கொள்ள முடியவில்லை?
3. சபதம்தான் நிறைவேறி விட்டதே. அதற்கப்புறம் மங்கம்மாவிற்கு சுடுகாட்டில் என்ன வேலை?
4. கோவில் கட்டி கும்பிடுவதன் மூலம், உயிரோடிந்து போராட வலுவில்லாமல் தற்கொலை செய்து கொண்டதை புனிதப்படுத்தி ஊக்கப்படுத்துகிறீர்களா?
இன்னும் நிறைய பகுத்தறிவு கேள்விகள் உள்ளன.
இந்து புராணங்களில் மட்டும்தான் உங்களுக்கு இவ்வாறு கேள்வி கேட்க தெரியும் என்பதால், நான் இங்கே உதவிக்கு வரவேண்டியது ஆகிவிட்டது.
திராவிட குடிதாங்கிகள் இந்த அளவு கட்டுகதைகளை பிரசுரம் பண்ணும்படி தள்ளும் நிலைக்கு வந்திருப்பது, மடியில் ஒன்றும் சரக்கில்லை என பல அறிவார்ந்த வலைப்பதிவாளர்கள் சொல்லி வருவதை உறுதி செய்திருக்கிறது.
இந்த மூடநம்பிக்கைகளை கேள்விப்பட்டால், ஈவெரா கரும்பாறை கருத்துகள் தானாகவே தவிடுபொடியாக இருப்பது தெரியும்
பரம்ஸ்
பி.கு: கட்டுரையாளர், நிறைய காமிக்ஸ் படிப்பதால் இது போன்ற 'படைப்புகளுக்கு' உந்தப்படுகிறாரா என்பதை அறிய ஆவல்
மங்கம்மாள் அம்மையின் சரித்திரத்தை அறியத் தந்ததற்கு மிக்க நன்றி திரு. லக்கிலுக்.
அய்யோ பாவம் பரமபிதா, திராவிட என்ற பெயரை பார்த்த உடனே கிளம்பி வந்துட்டாரு போல, இது திராவிட கழகத்தின் வலைத்தளம் அல்ல, திராவிட தமிழர்கள் வலைத்தளம் 70க்கும் மேற்பட்டவர்கள் எந்த கட்சியையும், எந்த இயக்கத்தையும் முன்னிறுத்தாமல் இந்த வலைதளத்தில் பங்களிக்கின்றனர்.
//திராவிட குடிதாங்கிகள் இந்த அளவு கட்டுகதைகளை பிரசுரம் பண்ணும்படி தள்ளும் நிலைக்கு வந்திருப்பது
//
நம் தெய்வங்கள் என்ற பதிவில் சொன்னது போல இங்கே நாங்கள் ஆவணப்படுத்துகிறோம்...
//திராவிட குடிதாங்கிகள் இந்த அளவு கட்டுகதைகளை பிரசுரம் பண்ணும்படி தள்ளும் நிலைக்கு வந்திருப்பது, மடியில் ஒன்றும் சரக்கில்லை என பல அறிவார்ந்த வலைப்பதிவாளர்கள் சொல்லி வருவதை உறுதி செய்திருக்கிறது.//
கட்டுக்கதை - ஹி ஹி ஹி. அத்த யாரு சொல்லுவது என்று ஒரு limit இருக்குபா.
அறிவார்ந்த வலைப்பதிவாளர்கள் - அது யாருபா? list கீதா?
// அய்யோ பாவம் பரமபிதா, திராவிட என்ற பெயரை பார்த்த உடனே கிளம்பி வந்துட்டாரு போல//
நையாண்டி இருக்கட்டும் அய்யா. கேட்ட கேள்விகளுக்கு பதில் எங்கே?
'வேலைப்பளு' அதிகமோ?
பரம்ஸ்
பரமபிதா, நல்லா பாருங்க நம் தெய்வங்கள் பதிவுக்கு சுட்டி கொடுத்திருக்கு அல்லவா, அங்கே போய் படியுங்கள், இது திராவிட தமிழர்கள் வலைப்பதிவு, பன்முகத்தண்மை கொண்டது, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இல்லாதவர்களும் என எல்லோரும் இதில் உள்ளனர், இன்னும் வரும் எழுத்தால் பதியப்படாத எம் மண்ணின் சாமிகளின் கதை இன்னும் வரும்.
// இது திராவிட தமிழர்கள் வலைப்பதிவு, பன்முகத்தண்மை கொண்டது, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இல்லாதவர்களும் என எல்லோரும் இதில் உள்ளனர்
//
குழலி சார்,
இது ஒரு காஸ்மோபாலிட்டன் இடமாக, பொழுது போக்கு மற்றும் கதையாக்கங்கள் பதிக்கும் இடமாக உருமாறியது எனக்கு தெரியாது. தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
கீழ்க்கண்ட உங்கள் 'கோஷம்' outdated போல.
"திராவிட இனத்தை சேர்ந்த படித்த இளைய தலைமுறையை சேர்ந்த நாங்கள் திராவிடத்தை கொச்சைப்படுத்தும் நசிவு சக்திகளை எதிர்த்து போராட ஆரம்பித்திருக்கும் வலைத்தளம் இது."
மூடநம்பிக்கையும் திராவிடத்தின் ஒரு அமசம்தான் என்று சொல்வதா?
மூடநம்பிக்கைகள் தான் உண்மையிலேயெ திராவிடத்தை கொச்சைப்படுத்துகின்றன என நினைத்துக் கொண்டிருந்தேன்.
வணக்கம் பரமபிதா.
இந்த கட்டுரை மங்கம்மாளை வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது. நான் நாத்திகன் என்பதை பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறேன். உங்கள் கேள்விகளை மங்கம்மாள் பக்தர்கள் யாரையாவது பார்த்து கேட்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்னத்தை செய்வது இந்து தெய்வங்கள் மற்றும் தமிழக திராவிட தெய்வங்களின் எல்லா கதையும் இந்தக் கோலத்தில் தான் இருக்கிறது.
விநாயகர் மற்றும் முருகன் பிறந்த கதைகளும் இதே மாதிரி கேலிக்குரியவையே.
இந்த கட்டுரையை எழுதிய கட்டுரையாளன் மட்டுமே நான். மற்றபடி அந்தக் கதையில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.
விரைவில் ஊத்துக்காடு எல்லையம்மன் பற்றிய கட்டுரையை பதிப்பிக்கிறேன்.
கட்டுரையை சீரியஸாக வாசித்தமைக்கு நன்றி.
லக்கியாரே,
மங்கம்மா இந்து தானே? பரம பிதா அவதரித்து கேள்வி கேட்பதால் எனக்கு தீடீர் ஸந்தேகம் :-)
நல்ல கதை லக்கிலுக்
நல்ல கதை லக்கிலுக்
நல்ல பதிவு.
மண்ணின் வரலாறு, கதை, கலை, கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகள், அடை, அலங்காரம் ஆகியவைகளை
இக்காலத்தவர்கள் மறந்துவிடாமல், தடம் அழியாமல் காப்பாற்றபட வேண்டியது அவசியம். நம் ஒவ்வொருவரின்
கடமை.
நன்றி.
தமிழ்ப்பட ஆசாமிகளின் கண்ணில் பட்டால், திரைப்படமாக சுட்டுவிடுவார்கள்.
அப்ப முருகன் திராவிட கடவுள் இல்லையா ?
எங்கோ இருக்கும் மங்கம்மாள் கோவிலை (ஏன் அதை கோவில் என்று சொல்லவேண்டும், ஆலயம்! என்று சொல்லலாமா?)
எடுத்து கடவுள் நம்பிக்கையில்லாத திராவிடர் கூட்டம் சுட்டிக் காட்டியுள்ளது.
விஷயத்தைத் தெரிந்துகொண்டேன், நன்றிகள் அதற்கு.
இது போல் கோடான கோடி தெய்வங்கள் கோவில்கள் தென்னகம் மட்டுமில்லாமல் வட நாட்டிலும் பார்க்கலாம். அதையெல்லாம் எங்கே கொண்டு போய்ச் சேர்ப்பது ?
எந்த மதத்தில் சேர்ப்பது ?
அல்லது அங்கே கும்பிடுபவர்கள் தனி மதத்தவர் என்று தங்களை அறிவித்துக் கொள்கிறார்களா ?
அப்படி அறிவிப்பதனால் யாருக்க இலாபம் ?
மங்கம்மாளை மேரியம்மாளாக்கு வெள்ளைக்காரியை வணங்க வைக்க எவ்வளவு நாளாகும் ?
//
அறிவார்ந்த வலைப்பதிவாளர்கள் - அது யாருபா? list கீதா?
//
அறிவாளின்னாலே ஒட்டு மொத்த குத்தகை எடுத்திருக்கும் திராவிட கும்பலில் இருந்து ஒருவரும் இல்லை என்பது என் எண்ணம்
பரம்ஸ் விளக்குவார் என்று நம்புகிறேன்.
நல்ல முயற்சி. தொடருங்கள்.
அடுத்தவர் மன உணர்வுகளை மதிக்கத்
தெரியாது, மனிதக் கூட்டில் குடி இருக்கிறதுகள்
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
//மங்கம்மாளை தங்கள் குலதெய்வமாக இன்றும் வழிபட்டுவருபவர்கள் யார் தெரியுமா? மங்கம்மாளால் பழிவாங்கப்பட்ட அவரது பங்காளிகளின் வம்சாவழியினர் தான்.//
அல்லன அழிப்பதும் நல்லன் அருள்வதும் அடுத்தடுத்து வருவது என்பதை மிகவும் அழகாகவும் இயல்பாகவும் தீப்பாய்ந்த மங்கம்மாள் சரிதம் மூலமாகச் சொல்லி உள்ளீர்கள், மிக்க நன்றி!
தொடரட்டும் உங்கள் முயற்சி! இன்னும் பல
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து பின் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் நற்கதைகளையும் தாருங்கள்!
//"தீப்பாய்ந்த மங்கம்மாள் ஆலயம்" என்பதை மாற்றி "ஸ்ரீமங்கம்மாள் ஆலயம்" //
இங்குதான் 'திரு' வாளர்களின் திருவிளையாடல் பாதிப்பு.
Post a Comment