Tuesday, January 23, 2007

சிலையான பின்பும் பெரியார் போராடுகிறார்!!!

.... பெரியார் சிலை மீது பக்தர்களுக்குக் கோபம் கிடையாதாம். சிலைக்குக் கீழே தந்தை பெரியார் சொன்ன வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளதே அதுதான் பக்தர்கள் மனத்தைப் புண்படுத்துகிறதாம். உண்மையிலேயே பக்தர்கள் மனத்தைப் புண்படுத்துகிறதா? எனச் சற்று விவரமாகப் பார்ப்போம்.

தந்தை பெரியார் சிலைகள் கீழ், கடவுள் மறுப்பு வாசகம் பொறிக்கப்படுகிறது. அவை. கடவுள் இல்லை - கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி - தந்தை பெரியார்.

இதில் எந்த இடத்தில் தந்தை பெரியார் கடவுளை இழிவுபடுத்தினார்? அவமானப்படுத்தினார் என்பதைச் சீர்தூக்கிப் பாருங்கள். எந்த இடத்திலும் கடவுளைப் பெரியார் இழிவுபடுத்தவே இல்லை என்பதுதான் உண்மை. கடவுள் இல்லை எனச் சாதாரணமாகச் சொன்னால் கூட ஏதாவது மாற்றங்களைச் செய்து விடப் போகிறார்கள் எனக் கருதிய பெரியார், இரண்டு முறை இல்லை என்று சொல்லி விட்டு மூன்றாம் முறை இல்லவே இல்லை என அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

தந்தை பெரியார் கடவுளைத் திட்டவே இல்லை. ஏன் என்றால் இல்லாத கடவுளை ஏன் திட்ட வேண்டும். கடவுள் உண்டு என்பதோ, இல்லை என்பதோ கடவுளைத் திட்டுவது ஆகாது. அடுத்து கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று சொன்னார். கடவுளை முட்டாள் என்று பெரியார் சொல்லவில்லை. ஏனெனில் இல்லாத கடவுளை அறிவாளி என்றோ முட்டாள் என்றோ சொல்ல வேண்டியதில்லை.

மிகமிகத் தெளிவாகக் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றார். இதற்காக யார் கோபப்பட்டாலும், அவர்களும் கடவுள் கற்பிக்கப்பட்ட ஒன்று என்பதையும், அப்படிக் கற்பித்தவன் செயல் முட்டாள் தனமானது என்றும் ஒத்துக்கொள்வதாகவே பொருள்படும். கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன் என்றார். இங்கேயும் கடவுளை அயோக்கியன் என்று தந்தை பெரியார் சொல்ல வில்லை. ஏனெனில் இல்லாத கடவுளை ஏன் அயோக்கியன் என்று சொல்லவேண்டும் என்பதுதான் அவர் கருத்து.

ஆனால் கடவுள் என்ற தன்மையைப் பரப்புகின்ற செயலைச் செய்பவன், செய்கிற மனிதன்தான் அயோக்கியன் ஆவான். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றால் கடவுள் காட்டுமிராண்டி என்பது கிடையாது. கடவுளை வணங்குபவன்தான் காட்டுமிராண்டி என்பதாகும். ஆகவே தந்தை பெரியாரின் வாசகத்தை ஆழ்ந்து பார்த்தால் உண்மை தெளிவாகப் புரியும்.

தந்தை பெரியார் சிலை அமைக்க 1972 ஆம் ஆண்டிலேயே உரிய பணம் கட்டணமாகச் செலுத்தி, தமிழக அரசிடம் அனுமதி பெற்ற இடத்தில்தான சிலை வைக்கப்பட்டுள்ளது. 200 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தை 20 அடி உயரமுள்ள பெரியார் சிலை மறைக்கிறது என்பது மமதை வாதம். மதவாதம் எனலாம். அப்படி என்றாலும் ராஜகோபுரம் கட்டியது தநதை பெரியார் சிலைக்கு அனுமதி பெற்ற பின்தான் என்பதால் அவர்களின் உள்நோக்கம் வெளிப்பட்டு விட்டது.

அனுமதியின்றி - வரைபடம் இன்றி கட்டப்பட்டுள்ள கோயில்களும், நடைபாதை கோயில்களும் அனுமதியோடு வைக்கப்படுகிற சிலைகளைப் பார்த்துச் சிரிக்கும் என்றால், அந்த ஆணவச் சிரிப்பை அடக்கத்தான் வேண்டும்.

நன்றி : அறிவுக்கொடி இதழின் ஆசிரியர் உரை - ஜனவரி 2007

3 comments:

Anonymous said...

good one
:)

said...

///200 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தை 20 அடி உயரமுள்ள பெரியார் சிலை மறைக்கிறது என்பது மமதை வாதம். மதவாதம் எனலாம். அப்படி என்றாலும் ராஜகோபுரம் கட்டியது தநதை பெரியார் சிலைக்கு அனுமதி பெற்ற பின்தான் என்பதால் அவர்களின் உள்நோக்கம் வெளிப்பட்டு விட்டது. /

உலகறிந்த இரகசியம்.

said...

பெரியார் தனக்குச் சிலை வைப்பதையே விரும்பவில்லை.பலமுறை வேண்டுகோள்கள் வைக்கப்பட்டப்பின்தான் ஒத்துக்கொண்டார்.அப்போதுதான் சொன்னார் எனது ஒவ்வொரு சிலைக்கும் அடியில் இந்த வாசகங்கள் இருக்கவேண்டும்,இல்லாவிடில் அங்கே சூடம் கொழுத்தி தேங்காய் உடைக்க ஆரம்பித்து விடுவார்கள் என்றார்.(அவர் சொன்ன படியே அறிஞர் அண்ணாவுக்குச் சிலர் செய்து விட்டன்ர்}.
இடி மின்னல் நெருப்பு காற்று பற்றி தெரிந்திருக்காத மனிதன்தான் கடவுளைப் படைத்தான்,அவன் அறியாத காரணத்தினால்.
கடவுள் பெயரால் நடக்கும் வியாபாரத்தைச் செய்பவர்கள்தான் கடவுளைப் பரப்புகிறார்கள்,அதிலும் அவர்கள் அதிகம் சாம்பாதிக்கின்ற இடத்தில் உள்ள கடவுள்தான் சக்தி உள்ளவர் என்று பரப்பும்போது அவர்கள் யோக்கியமானவர்களா?இணையத்தில் பணம் அனுப்பி பூசை செய்யலாம் ஆனால் கடவுள்.காம் அல்ல.சில் கோவில்களில் மட்டுந்தான்.
நான் இதைத்தருகிறேன் நீ என்க்கு இதைச்செய்யவேண்டும் என்று கும்பிடுபவர்கள்தாம் அதிகம்.நீ என்க்குச் செல்வம் தா வெற்றியைத்தா,எனது படம் நன்றாக ஓடவேண்டும் நான் உன்க்கு என் முடியைத்தருகிறேன் என்பவர்கள் எந்தக் காலத்தில்,விஞ்ஞான யுகத்திலா வாழ்கிறார்கள்?
இப்போது சொல்லுங்கள் முட்டாள்,அயோக்கியன்,காட்டுமிராண்டி எல்லாம் கடுமையான வார்த்தைகள்தாம் ஆனால் உண்மை இல்லையா?
உங்கள் குழந்தைகளிடம் சொல்லுங்கள் கடவுள் என் உயிரைக் காப்பாற்றினார் அதனால் அவருக்கு எனது... முடியைக் கொடுக்கப்போகிறேன் என்று.உங்களை அறிவாளி என்று அழைக்கிறார்களா என்று தயை செய்து சொல்லுங்கள்.