Thursday, January 25, 2007

திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பாத்திரம்!

திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பாத்திரம்

'நந்தன்' இதழ்கள் தமிழியக்கத்தின் பதாகையாக திகழ்ந்து ஒளிர்ந்த 1996-2001 காலகட்டத்தில், அவ்விதழில்அதன் நிறுவிய ஆசிரியர் திரு அருணாசலம் அவர்கள் "ஆனாரூனா" என்ற பெயரில் "நெஞ்சின் அலைகள்" என்கிற தமிழ்ச்சமூக-இயக்க வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள் (தொடர்) எழுதி வந்தார்.

ஒருமுறை இடதுசாரிச் சிந்தனையாளரும் எழுத்தாளருமான பொன்னீலன் அவர்கள், தமது நூல் ஒன்றில் திராவிட இயக்கம் பற்றி - (பெரும்பான்மை இடதுசாரி மற்றும் தனித்தமிழ்த் தேசியவாதிகள் போலவே) திராவிட இயக்கத்தின் வரலாற்றுத் தேவை, செயல்பாடுகள் போன்றவற்றைப் பற்றி சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இங்கே வலையுலகிலும், இணையத்தின் வேறு தளங்களிலும் இன்றும் அவை போன்ற கேள்விகள் திராவிட இயக்கத்தின்பால் தொடுக்கப்படுகின்றன.

அவைகளுக்கெல்லாம் விடையிறுக்கும் வகையில் திராவிட இயக்கத்தின் வரலாற்றுத்தேவையை, இயக்கம் செய்த வரலாற்றுப் பங்கை விளக்கும் வகையில் ஒரு கட்டுரையை ஆனாரூனா எழுத்யிருந்தார். அதை இங்கே தருகிறோம். இனி அந்தக் கட்டுரை:

*---------*---------*---------*-----------*------------**---------*---------*---------*-----------*------------*-----------*

திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தைச் சரியாகவே கணித்த பொன்னீலனும், திராவிட இயக்கம் எது என்பதில் குழப்பத்துடனே எழுதுகிறார்.

தனித்தமிழ் இயக்கம், நீதிக்கட்சி, திராவிட இயக்கம் மூன்றையும் ஒன்றாய்க் குழப்பி, வாசகனையும் குழப்புகிறார்.

"பிராமணிய எதிர்ப்பு சைவ எழுச்சியாகவும், தனித்தமிழ் எழுச்சியாகவும் படர்ந்தது. இதிலிருந்து கிளைத்த குருத்துத்தான் அடுத்த நிலையில் தென்னிந்திய சுய உரிமைச் சங்கமாக உருவெடுத்தது ... நில உரிமைச் சங்கத்தார் பிராமணர்கள் மீது பழி சுமத்தினார்கள். இந்தப் பிரச்சாரத்துக்குச் சாதகமாக அவர்களுக்கு ஒரு சித்தாந்தம் தேவைப்பட்டது. அது கடவுள் எதிர்ப்பாக ஆக்கப்பட்டது. மூடப்பழக்க வழக்க எதிர்பார்க்கப்பட்டது. தென்னிந்தியர் திராவிடர் என்றாகி ஒரு இனவாதக் கருத்து வடிவம் உருவாயிற்று" - என்கிறார் பொன்னீலன்.

திராவிட இயக்கம் பற்றிய இந்தக் குழப்பமான கருத்துருவாக்கத்துடனேயே பலரும் விவாதம் செய்கிறார்கள்.

தனித்தமிழியக்கத்தின் குருத்தல்ல தென்னிந்திய நில உரிமைச் சங்கம். இந்த இரு அமைப்பின் சித்தாந்தத் தேவையால் வந்துதித்தல்ல, சுயமரியாதை இயக்கம் - பகுத்தறிவியக்கம் - திராவிடர் கழகம் என்று அறியப்படும் பெரியார் இயக்கம்.

தனித்தமிழியக்கம் நீதிக்கட்சியாகி, அதுவே திராவிட இயக்கமாய் உருமாறிற்று என்கிற தவறான அனுமானம், இன்றைய "புதிய தமிழ்த் தேசியர்களை" வேறு விதமாய்க் குழப்பிக் கொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசியமாய் உருவாகிக் கொண்டிருந்த எழுச்சியை "திராவிட தேசியம்" திசை திருப்பி விட்டது என்பது இவர்களின் குழப்பம்.

"1938 ஆம் ஆண்டில் இந்தி திணிக்கப்பட்டபோது அதை எதிர்த்து முதல் முறையாகத் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தலைவர்களும் போராடினார்கள்.

பெரியார், சி.ஆ.பெ.விசுவநாதம், அறிஞர் அண்ணா, போன்ற அரசியல் தலைவர்களும், மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், ஈழத்து அடிகள் போன்ற தமிழ் அறிஞர்களும் ஒன்றுபட்டு நின்றார்கள். இந்தியை ஒன்றுபட்டு எதிர்த்தார்கள். அந்தப் போராட்டத்தில் விளைந்த முழக்கம்தான் "தமிழ்நாடு தமிழருக்கே" என்பது.

"அன்றைக்கு ஒரு பெரிய எழுச்சி தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டது. அந்த எழுச்சியை நாம் முழுமையாகப் பயன்படுத்தி இருந்தோமேயானால் சென்ற நூற்றாண்டிலேயே இந்தத் தலைவர்கள் காலத்திலேயே தமிழ்த் தேசியம் நிலை நாட்டப்பட்டிருக்கும். ஆனால், அது திரிந்து திராவிட தேசியமாக மாறி விட்டது "
- என்று வேதனையோடு இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

திராவிடத்தால் ஏமாற்றப்பட்டு விட்ட புதிய தமிழ்த் தேசியவாதிகளுக்கு ஓர் உண்மையைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

தனித்தமிழ் இயக்க அறிஞர்களின் உணர்வுகளை நாம் மதிக்கிறோம். அவர்களுடைய புலமைக்குத் தலைவணங்குகிறோம். ஆனால், தனித்தமிழ் இயக்கம் என்பது ஓர் புலவோர் இயக்கமே.

ஒரு புறம் தமிழ்ப்புலமை, மறுபுறம் சைவத் தீவரம். இதுதான் தனித்தமிழ் இயக்கத்தின் உள்ளடக்கமாய் இருந்தது.தங்களின் தமிழ்ப் புலமை சைவப்பற்றுக்கு எதிராகி விடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள்.

சைவம் போர்த்திய தமிழ், வடமொழியை எதிர்த்ததே தவிர பார்ப்பனியக் கருத்தோட்டங்களை எதிர்த்ததில்லை.

உண்மைதான்.... அந்நாளில் சுயமரியாதை இயக்கத்துக்கும் தனித்தமிழியக்கத்துக்கும் ஒரு மௌனயுத்தம் இருந்து வந்தது. பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைக் கண்டு தமிழியக்கம் கசப்புற்றிருந்தது.

திராவிட இயக்கம் ஆரிய வேதங்களையும் சடங்குகளையும் சித்தாந்தங்களை மாத்திரம் விமர்சிக்கவில்லை. "தமிழ் மறை"களையும் கட்டுக் கதைகளையும் கூட விசாரணைக்குக் கொண்டு வந்தது.

"தமிழும் சைவமும்" என்கிற முழக்கத்துடன் எண்ணாயிரம் தமிழறிஞர்களை, அவர்கள் புத்தர்களாகவும் சமணர்களாகவும், நாத்திகர்களாகவும் இருந்தார்கள் என்கிற ஒரே காரணத்துக்காகக் கொன்று குவித்தவர்களை அறிவின் மேடையில் இந்தப் பகுத்தறிவியக்கம் விசாரணை செய்தபோது பார்ப்பனர் மாத்திரமல்ல - பல "தமிழறிஞர்களும்" இங்கே தலை கவிழ்ந்து, மனம் புழுங்கிச் சபித்தார்கள்.

பொதுவில், தமிழியக்கம் பார்ப்பனர்களை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் தன்னை வைத்துப் பார்த்தது.

திராவிட இயக்கமோ வர்ணாசிரம தர்மத்தின் அமைப்பு முறையையே மறுத்தது.

தமிழியக்கம் மேலோர் சார்ந்த இயக்கமாக இருந்தது.

திராவிட இயக்கமோ ஒடுக்கப்பட்ட தீண்டத்தகாத மக்களின் இயக்கமாக வளர்ந்தது.

தமிழியக்கத்தின் தமிழுக்குப் பின்னே இறையியல் இருந்தது.

திராவிட இயக்கத்தின் தமிழுக்குப் பின்னே அறிவியல் நின்றது.

பெரியாரின் மொழிக் கொள்கை விஞ்ஞான பூர்வமானது. சில பண்டிதர்களின் கட்டுப்பாட்டில் மொழியைப் பூட்டி வைத்து வளர்ப்பதை அவர் எதிர்த்தார். மக்களே மொழியினதும் பண்பாட்டினதும் படைப்பாளர்களாக இருந்து வந்திருக்கிறார்கள் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். மொழியை மக்கள் உருவாக்கினார்கள் என்பது போலவே மக்களை உருவாக்குவதில் மொழிக்கும் பங்குண்டு. மனிதனை அது புதிய சிந்தனைகளுக்கும், புதிய வாழ்க்கைக்கும் வழி நிடத்த வேண்டும் என்று எதிர்பார்த்தார்.

தமிழ்மொழியை மத-மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். அதை ஆங்கிலத்தைப்போல், பிரெஞ்சு மொழியைப் போல் நவீன அறிவியலுடன் வளர்த்தெடுக்க வேண்டும் என்று பெரியார் தமது காலமெல்லாம் போராடினார்.

பக்திக் கதைகளையும், பாமரத்தனமான நம்பிக்கைகளையும் தவிர இன்று தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டார்.

"தமிழ் என்று சமயத்திலே போய்ப புகுந்ததோ, சமயக்காரன் எப்போது தமிழ், கதவைத் திறந்து இறந்தவனை எழுப்பியது என்று சமயத்திலே கொண்டு போய்ப் புகுத்தினானோ - அன்றே தமிழகம் முன்னேற முடியாமல் போய் விட்டது. மதம் தமிழைக் கெடுத்தது.

புலவர்களுக்குப் பகுத்தறிவு பெறும் வாய்ப்பும், பகுத்தறிவு பெற்றவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு காரணமாகத் துணிவு பெறும் வாய்ப்பும் இல்லாமல் போகும்படியான நிலைமையும் இருப்பதால் தமிழில் ஆக்க இலக்கியங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமற் போய்விட்டது"
- என்று புலமையையும் கூட அவர் விமர்சனத்துக்குக் கொண்டு வந்தார்.

தமிழில் மண்டிக்கிடக்கும் காட்டுமிராண்டித் தனங்களைச் சாடினார். இந்தக் காட்டுமிராண்டித் தனங்களிலிருந்தும் தப்பபிப்பிராயங்களிலிருந்தும் விடுபடாமல் விமோசனம் இல்லை என்று ஒரு தாயின் தவிப்புடன் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று தமிழனைப் பார்த்துக் கெஞ்சினார் ; இடித்துரைத்தார் ; அறிவொளி பாய்ச்சினார் பெரியார்.

ஆதாயம் தேடிகளும் விளம்பரப் பிரியர்களும் இதற்காகவே காத்திருந்தவர்கள் போல்
, "அய்யே, தமிழ் காட்டுமிராண்டி மொழியாம். சொல்கிறார் பெரியார்" - என்று கூக்குரலிட்டார்கள்.

"பார்ப்பனர்கள் தமிழை "நீச பாஷை" என்று சொன்னால், பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்கிறார்" - என்று "அழகாக" விரிவுரை செய்தவர்களும் உண்டு.

தங்களது பிற்போக்குக் கருத்துகளையும் நேர்மையற்ற நடவடிக்கைகளையும் மூடி மறைக்கும் சாகசத்துடன் திராவிட இயக்கத்திற்கு எதிராகத் தமிழை நிறுத்த நினைத்தவர்களும் உண்டு.

நிலைமை இவ்வாறு இருந்ததனால், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து இங்கே பேரெழுச்சி ஏற்பட்ட போது தமிழியக்கத்தினர் - காத்திருந்த போர் வந்து விட்டது - என்று போருக்குப் புறப்பட்டு விடவில்லை. சமஸ்கிருத, இந்தி ஆதிக்க எதிர்ப்பு ஒரு வேளை 'சமய எதிர்ப்பாகி விடுமோ' என்று தயங்கி மருகினார்கள்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரி போன்ற சுயமரியாதை இயக்க வீரர்கள்தான் தமிழ்க்கனலை ஊட்டி வளர்த்தார்கள். இந்தத் தமிழ்க்கனல் சைவசமயத்தைச் சுட்டெரித்து விடுமோ என்கிற தவிப்பில்
மொழிப் போரிலிருந்து விலகியே இருந்தார்கள்.

அப்போது புகழ்பெற்ற தமிழ் அறிஞரான "மறைமலை அடிகளுக்கு" விடுதலையில் பகிரங்கக் கடிதம் ஒன்றை உருக்கத்துடன் தந்தை பெரியார் எழுதினார். (30.8.1937)

"மாட்சிமை மிக்க அடிகாள் !
திக்கு நோக்கித் தண்டனிட்டு விண்ணப்பம்.
நீவிர் பெருந்தமிழ்ப்புலவர் ஆரமுதன்ன தமிழுடன் வடமொழியும் ஆங்கிலமும் கற்றுத் தேர்ந்த பெரியார். தனித்தமிழ்
நூல்கள் பல எழுதி வெளியிட்ட மதிமான். நல்ல ஆராய்ச்சியாளர், கடல்மடை திறந்தன்ன சொற்பொழிவாற்றும் வன்மை படைத்தவர்.

ஹிந்தி மொழியினால் தமிழுக்கு வரக்கூடிய கேட்டை நன்குணர்ந்தவர், எனவே நமது தமிழ்த்தாய் கொலை செய்யப்படப்போகும் இத்தருணத்திலே தாங்கள் பல்லாவர ஆசிரமத்திலே வாளாவிருப்பது தகுமோ ? - இது தருமந்தானோ ? தமிழ்த்தாய் தங்களை இரங்கி அழைக்கிறாள்.

திருநெல்வேலியிலிருந்து "ஹிந்தி" எதிர்ப்பு ஜாதா (பேரணி) சென்னைக்குப் புறப்படப்போகிறதாம். அந்த ஜாதாவின் தலைமை தாங்கி நிடத்த தங்களை விட அறிவும் தன்மையும் படைத்த வீரத்தமிழன் தமிழ்நாட்டில் இல்லை என்பது தமிழ் மக்கள் முடிவு.

ஆகவே அடிகாள் ! வரிந்து கட்டிக் கொண்டு தமிழன்னையைக் காப்பாற்றப் போர் தொடுக்க எழுங்கள். தமிழர்கள் எல்லோரும் இப்பொழுது பல்லாவரத்தையே நோக்குகிறார்கள்.

தமிழ் பக்தியையும், தமிழ் வீரத்தையும் தமிழுலகத்துக்கு விளக்கிக் காட்ட இது ஒரு நல்ல தருணம். இத்தருணம் தப்பினால் இது போன்ற ஒரு நற்றருணம் வாய்ப்பது அரிது.

ஆதலின் அடிகாள், எழுமின் ! போர்க்கோலம் கொள்மின் ! புறப்படுமின் நெல்லைக்கு ! ஜாதாவுக்குத் தலைமை தாங்கித் தமிழ்ப்போர் தொடுக்கப்புறப்படுமின் !"

- விடுதலை (30.8.1937)

இவ்வாறு தயக்கத்திலும் மயக்கத்திலும் இருந்தத் தமிழ்ப்புலவர்களை மொழிப் போருக்கு அழைத்து வந்தது திராவிட இயக்கமே.

பெரியாருக்கு முனபாகவே - யாரோ இங்கே புரட்சிகரமான கருத்துக்களை விதைத்து - போர்க்குணம் மிகுந்த தமிழ்த்தேசியப் பெருமிதத்தை வளர்த்துக் கொண்டிருந்தது போலவும், பெரியாரின் திராவிட இயக்கம் வந்து அதைக் கெடுத்து விட்டது போலவும் கதையளப்பது விவரமறியாததாலா? விஷமத்தனத்தாலா ?

திராவிட இயக்கம் என்று பெயர் சூடிக் கொண்டிருப்பதாலேயே இது தமிழியக்கம் அல்ல என்று தர்க்கிப்போர் விவரமறியாதோர் என்று ஒதுக்கி விட முடியாது. இந்தப் "புதியத் தமிழ்த் தேசியர்கள்" உண்மையில் பழமைவாதிகளே.

இவர்களின் திராவிட இயக்க எதிர்ப்புக்குப் பின்னே சமயப் பற்றும் சனாதன கிறுக்கும் இல்லை என்று சொல்ல முடியுமா ?

அன்று பகுத்தறிவை எதிர்த்த பக்திமான்களின் தமிழ் உணர்வுக்குப் பார்ப்பனியம் ஆசி வழங்கியது. இன்றும் அது இல்லை என்று சொல்ல முடியுமா ?


- திரு அருணாசலம்("ஆனாரூனா")
"நெஞ்சின் அலைகள்" கட்டுரை ஒன்றிலிருந்து ( 'நந்தன்' ).

- நம் வலைப்பூவுக்கு இக்கட்டுரை அனுப்பி உதவிய நண்பர் திரு. நியோ

1 comments:

said...

அய்யா ஆனாரூனா அவர்கள் நடத்தி வந்த 'நந்தன்' இதழ் தமிழ்/தமிழர் எதிரிகளுக்கு போர்முரசமாக எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தது. 2001-இல் பார்ப்பனர்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஜெ. வந்த பிறகு நந்தனையும், ஆனாரூனாவையும் ஒழித்துக் கட்டுவதற்கு மிகுந்த அக்கறை காட்டினார்!

அய்யாவின் தமிழ்ச் சான்றோர் பேரவை 90களில் மிகுந்த எழுச்சியுடன் தமிழிசை மன்றங்களுக்குப் புத்துயிர் அளித்தது.

இப்போது மருத்துவர் அவர்கள் அப்பணியைத் தொடர்ந்து செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.