
தந்தை பெரியார்
1879 செப்டம்பர் 17
இன்று தந்தை பெரியார் ஈ.வெ. இராமசாமி பிறந்தார்.
இவர் குழந்தையாய் மலர்ந்த இடம் ஈரோடு நகரம் (தமிழ்நாடு மாநிலம் - இந்தியா).
தந்தையார் வெங்கட்ட நாயக்கர், தாயார் சின்னத்தாயம்மையார்.
1885 வயது – 6
அந்த நாளில் வழக்கமாக நடைபெற்ற சிறிய திண்ணைப் பள்ளிக்கு இவர் அனுப்பப்பட்டார்.
1889 வயது - 10
அய்ந்து ஆண்டுகளிலேயே இவரது பள்ளிப் படிப்பு முடிவுற்றது.
1891 வயது - 12
தம் தந்தையாரின் வணிகத் தொழிலில் இவர் ஈடுபட்டார்.
1895
இவர்தம் பெற்றோரின் விருந்தோம்பலில் மகிழ்ச்சியுறும் வைணவ மத ஆசிரியர்கள் இவரது இல்லத்தில் ஆற்றும் உரைகளைக் கேட்பது இவருக்கு வழக்கம். திராவிட இனத்தவரை அடக்கி ஆள்வதற்காக ஆரிய இனத்தவரான பார்ப்பனர் இந்து மத தெய்வங்கள் பற்றிய பொய்யான புராணக் கதைகளைப் பரப்பினர். அவற்றின் முரண்பாடுகளையும் கற்பனை ஏமாற்றுகளையும் குறித்து, சிறு பையனாக இருந்த பொழுதே இவர் கேள்விகள் எழுப்பத் தொடங்கி விட்டார். இளைஞர் இராமசாமி உள்ளத்தில் பகுத்தறிவு - கடவுள் மறுப்புக் கருத்துகள் பூக்கத் தலைப்பட்டன.
1898
நாகம்மாள் என்னும் 13 ஆண்டுகள் நிறைந்த நங்கையை இவர் திருமணம்
புரிந்துகொண்டார். பக்தியாளரான தம் மனைவியை இவர், திருத்தினார். அவரது உள்ளத்தில் பகுத்தறிவுக் கருத்துகளை விதைத்தார்.
1900
பெண் குழந்தைக்கு இவர் தந்தை ஆனார். அதுவோ அய்ந்து மாதங்களிலேயே மடிந்தது. அதன் பின்னர் இவருக்குக் குழந்தையே பிறக்கவில்லை.
1904
தந்தையாரின் கடுமையான கண்டனத்தால் இவர் குடும்பத்தையே துறந்தார். முதலில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயவாடா நகருக்குச் சென்றார். அய்தராபாத், கோல்கத்தா நகரங்களுக்குப் போனார்.
அறிவுத் தெளிவு தந்த காசி அவமானம்
கங்கை ஆற்றின் கரையில் உள்ள இந்துக்களின் புனித நகரமான காசி நகரை (வாரணாசி) இவர் அடைந்தார். அங்கோ அன்ன சத்திரங்களில் இந்து மதத்தின் மற்றச் சாதியினர்க்கு அனுமதி மறுக்கப்பட்டுப் பார்ப்பனர்க்கு மட்டுமே தனிமதிப்புடன் உணவு வழங்கப்பட்டதால், திராவிட இனத்தவரான இவரால் எளிதாகச் சத்திரத்து இலவச உணவைப் பெற முடியவில்லை.
சில நாள்கள் மிகக் கடுமையாகப் பட்டினியால் வாடிய இந்த எழில் தோற்றம் உள்ள இளைஞர் இராமசாமி, வேறு எந்த நேரிய வழியும் தோன்றாத நிலையில், ஓர் அன்ன சத்திரத்தில் நுழைவதற்கு முயன்றார். ஆனால் இவரது கரிய மீசை காட்டிக் கொடுத்துவிட்டது. எனவே, வாயில் காவலாளி சத்திரத்திற்குள் இவர் நுழைவதைத் தடுத்ததுடன், முரட்டுத்தனமாகத் தெருவிலே இவரைத் தள்ளிவிட்டான். அந்த நேரம், சத்திரத்தின் உள்ளே விருந்து முடிந்து விட்டதால், எஞ்சிய சோற்றுடன் எச்சில் இலைகள் தெருவிலே வீசி எறியப்பட்டன. கடந்த சில நாள்களாக வாட்டிய கடும் பட்டினியோ, அந்த எச்சில் இலைச் சோற்றைத் தெரு நாய்களுடன் போட்டியிட்டுத் தின்பதற்குக் கட்டாயப்படுத்தியது இராமசாமியை.
அவ்வாறு அந்தச் சோற்றைத் தின்னும்பொழுதே சத்திரத்தின் வெளிப்புறச் சுவரில் பொறிக்கப்பட்ட எழுத்துகளை இவர் விழிகள் பார்த்தன. அவையோ இந்த உண்மையை வெளிப்படுத்தின: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பணக்கார வணிகரான திராவிட இனத்தவரே அந்தச் சத்திரத்தைக் கட்டியவர். ஆயினும், மிக உயர்ந்த சாதியாரான பார்ப்பனர், தங்களுக்கு மட்டுமே தனி உரிமை கொண்டதாக அதில் குடியேறிவிட்டனர்; இலவச உணவு உண்டனர்.
திடீரென்று இந்த இளைஞரின் மனத்தில் சில கேள்விகள் தீப்பொறிகளாகத் தெறித்தன.
“ஒரு திராவிட அறப்பணியாளர் பணத்தில் கட்டப்பட்ட சத்திரத்தில் திராவிட இனத்தவர் உணவு அருந்துவதைப் பார்ப்பனர் தடுப்பது ஏன்? திராவிடரைப் பட்டினிச் சாவுக்கே தள்ளும் அளவுக்குத் தங்களின் கொடுமையான சாதி முறையை விடாப்பிடியாகக் கட்டாயமாக நடைமுறைப்படுத்துவதற்காக இவ்வளவு இரக்கம் இல்லாமலும் மதவெறியோடும் பார்ப்பனர் நடந்து கொள்ள வேண்டுமா?”
இந்த வினாக்களுக்கு உரிய நியாயமான விடைகள் பெரியாரின் அறிவுக் கூர்மையான சிந்தனைக்குக் கிடைக்கவில்லை.
காசியில் துளி அளவும் இரக்கம் அற்றுப் பார்ப்பனர் இழைத்த அவமானம் பெரியார் உள்ளத்தில் ஆழமான காயத்தை உண்டாக்கிற்று. அதுவே ஆரிய இனத்தின் மீதும் அவர்களின் படைப்புகளான கணக்கற்ற கடவுள்கள் மீதும் அழுத்தமான வெறுப்பு
நெருப்பைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது.
மிக உயர்ந்த ‘புனித நகரம்’ ஆகப் பார்ப்பனரால் போற்றப்படுவதுதான் காசி என்னும் வாரணாசி. ஆயினும் அங்கே காணப்பட்ட மிகமிக அருவருப்பான ஒழுக்கக்கேடான நடவடிக்கைக் காட்சிகளும், பரத்தைத் தொழிலும் (விபச்சாரமும்), ஏமாற்றுதலும், பகற்கொள்ளையும், கெஞ்சிப் பிச்சை கேட்கும் கூட்டங்களும், கங்கை ஆற்றில் மிதந்து செல்லும் பிணங்களும் புனித நகரம் என அழைக்கப்படும் அந்தக் காசியை வெறுக்கும்படியாகவே பெரியாரைத் தூண்டின. அதன் விளைவாக, தமது துறவு வாழ்க்கை பற்றி எழுந்த மறு சிந்தனை, இவர் தமது குடும்ப வாழ்க்கைக்கே திரும்பிச் செல்வதற்கு வழி கோலிவிட்டது.
இவர் ஈரோடு திரும்பியதும், இவர்தம் தந்தையார் தமக்குள்ள வணிக உரிமைகள்
அனைத்தையும் இரண்டாவது மகனான இவருக்கே ஒப்படைத்தார். தமது மிகப்பெரிய நிறுவனத்திற்கும் ‘ஈ.வெ. ராமசாமி நாயக்கர் மண்டி’ என மறுபெயர் சூட்டிவிட்டார்.
(தொடரும்)
Friday, May 18, 2007
தந்தை பெரியார் - வாழ்க்கை வரைபடம் - 1
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வாழ்த்துக்கள் !
தொடர் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
மகா பெரியாரின் அபூர்வ புகைப்படங்கள் ! லக்கி பதிவுக்கு நன்றி !
பெரியாரைப் பற்றி அரிய புகைப்படங்களையும் விடயங்களையும் சிறப்பாக தொகுத்திருக்கிறீர்கள். உங்கள் சீரிய தொண்டு தொடரட்டும்.
நன்றி
Post a Comment