அவ்வையார் படம் அரை நூற்றாண்டுக்கு முன்பு மிகப் பெரும் வெற்றி பெற்ற திரைக்காவியம். அவ்வையாராக நடித்த கே.பி. சுந்தராம்பாள் அக்காலக்கட்டத்திலேயே ஒரு லட்சரூபாயை அப்படத்தில் நடித்ததற்காக சம்பளமாக பெற்று தமிழ் திரை சரித்திரத்தில் இடம் பிடித்தார். ஜெமினி பிக்சர்ஸின் எஸ்.எஸ். வாசன் இப்படத்தை தயாரித்து பெரும் லாபம் சம்பாதித்தார். இவையெல்லாம் நமக்கு தெரிந்த செய்திகள். இத்திரைப்படத்தின் பின்னணியில் நடைபெற்ற சுவையான சம்பவம் ஒன்று பலரும் அறியாதது.
அவ்வையார் கதையை திரையில் கொண்டுவர முடிவு செய்த ஜெமினியின் கதை இலாகா கதை விவாதத்துக்காக அமர்ந்திருக்கிறது. இது ஏற்கனவே நாடகமாக பெரும் வெற்றி பெற்ற கதை என்றாலும் திரைக்காக சில புதிய விஷயங்களை மெருகேற்றுகிறார்கள். கதையின் பாத்திரங்களுக்கு யார் யார் என்ற விவாதத்தின் போது அமரர் எஸ்.எஸ். வாசன் அவ்வையாராக கே.பி.எஸ். அவர்கள் நடித்தால் சிறப்பாக அமையும் என்று கருத்து தெரிவிக்கிறார்.
ஆனால் விவாதத்தில் அமர்ந்திருத்த கதை இலாகாவைச் சேர்ந்த சிலர் உடனடியாக மறுப்பு தெரிவிக்கிறார்கள். அவ்வையார் பாத்திரம் இந்து மதமக்களின் மனதில் பதிந்த தெய்வீக பாத்திரம். சுந்தராம்பாள் ஒரு விதவை. "முண்டச்சியை வைத்து படமெடுத்தால் யார் பார்ப்பார்கள்? அவரை வைத்து படமெடுத்தால் படம் படுதோல்வி அடையும்" என்றும் எச்சரிக்கிறார்கள். சினிமாவுலகில் மூடநம்பிக்கைகள் கொடிகட்டிப் பறந்த காலம் அது. வேறு வழியில்லாமல் அரை மனதுடன் எஸ்.எஸ். வாசனும் சுந்தராம்பாளை நடிக்க வைக்க வேண்டாமென்று ஒப்புக் கொள்கிறார்.
இச்சம்பவத்தை கேள்விப்பட்ட வி.ஐ.பி. ஒருவர் கடும் கோபமடைகிறார். உடனடியாக வாசனின் இல்லத்துக்கு தானே நேரில் செல்லுகிறார். வாசன் வீட்டின் பெரிய கதவு அவரை கண்டதும் தானாக திறக்கிறது. ஊஞ்சலில் ஏதோ யோசனையில் இருந்த வாசன் இவரை கண்டதும் ஓடிவருகிறார்.
"என்னிடம் சொல்லியிருந்தால் நானே உங்களைத் தேடி வந்திருப்பேனே" என்கிறார் வாசன் மிகவும் பணிவுடன். அந்த வி.ஐ.பி. மீது அபரிதமான அன்பும், மரியாதையும் கொண்டவர் பண்பாளர் எஸ்.எஸ். வாசன்.
அதற்கு நம் வி.ஐ.பி., "எனக்கு உங்களிடம் ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் நான்தான் உங்களை நாடி வரவேண்டும். அதுதான் முறை." என்கிறார்.
வாசன் அவர் என்ன உதவி கேட்கப்போகிறார் என ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறார்.அப்போது அவர், "சுந்தராம்பாளை முண்டச்சி என்ற காரணத்தினால் அவ்வையாரில் நடிக்க வைக்காமல் தடை செய்தது தன்னை மிகவும் மனவருத்தத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. பெண்களை இப்படி இழிவுபடுத்துவதை தாங்க முடியாது" என்று தன் மன வேதனையை சொல்லி கவலைப் பட்டார்.
அதுமட்டுமல்லாமல் அவ்வையார் படத்தை சுந்தராம்பாளை வைத்தே எடுக்க வேண்டும் எனவும், அப்படி அந்தப் படம் இந்தக் காரணத்திலால் தோல்வியடையுமாயின், அந்தத் தோல்விக்குரிய விலை எத்தனை லட்சமாக இருந்தாலும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் வாக்களித்தார்.
உடனே வாசன், "உங்கள் சொல்லை நான் என்றாவது மீறியிருக்கிறேனா" என்று சொல்லி உடனடியாக அவ்வையார் படவேலைகளை கவனிக்க ஆரம்பித்தார். அவ்வையாராக கே.பி.எஸ். அபாரமாக நடித்துக் கொடுத்தார்.
படம் வரலாறு காணாத பெரும் வெற்றி. பேரறிஞர் அண்ணா இப்படத்தை பலமுறை விரும்பிப் பார்த்ததாகச் சொல்லுவார்கள். இப்படத்தில் நடித்ததற்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை ஏற்கனவே கே.பி.எஸ்.சுக்கு வாசன் வழங்கியிருந்தார். படத்தின் பெரும் வெற்றியைக் கண்ட அவர் இன்னொரு ஒரு லட்ச ரூபாயை கே.பி.எஸ்.சுக்கு வழங்கினார். அந்தக் காலத்து ஒரு லட்சரூபாய் என்பது இக்காலத்தில் ரஜினிகாந்த் வாங்கும் சம்பள மதிப்பை விட அதிகம் என்கிறார்கள்.
சுந்தராம்பாள் தன்னை வைத்து வாசனிடம் படம் எடுக்க சொன்ன வி.ஐ.பி.யின் வீட்டுக்கு நேரே செல்லுகிறார். தான் வாங்கிய கூடுதல் ஒரு லட்சரூபாயை அவர் பாதத்தில் சமர்ப்பித்து கண்ணீருடன் ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார்.
உடனே வி.ஐ.பி. பதறியபடி, "எனக்கு காலில் விழுவதே பிடிக்காது. இந்தப் பணம் உங்கள் திறமைக்கு கிடைத்த பரிசு. நான் உங்கள் திறமையின் மீது மதிப்பு வைத்தே வாசனிடம் சிபாரிசு செய்தேன். அதுமட்டுமல்லாமல் எந்தப் பெண்ணையும் பெண் என்ற ஒரே காரணத்துக்காக தாழ்த்துவதை என்னால் பொறுத்துக் கொள்ள இயலாது" என்றார்.
இத்தனைக்கும் கே.பி.எஸ். அந்த வி.ஐ.பி.க்கு எதிரான கொள்கையுடையவர். அவருக்கு எதிராக காங்கிரஸாருடன் இணைந்து டெல்லியில் பல பாடல்களை பாடியவர்.
சரித்திர நாயகர்கள் வரலாற்றில் அத்திபூத்தாற்போல எப்போதாவது தான் தோன்றுவார்கள். தமிழ் சமூகம் செய்த பாக்கியம் அந்த சரித்திர நாயகர் தமிழ்நாட்டிலே 125 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றினார். யார் அந்த சரித்திரநாயகன் என்பதை ஊகித்திருப்பீர்கள். பெண்விடுதலையையும், சுயமரியாதையையும் தன் இருகண்களாக போற்றிய மாவீரர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தான் அவர்.
வருங்காலத்தில் இதுபோன்ற வரலாற்றுநாயகர் தோன்றுவார் என்று உணர்ந்துதானோ என்னவோ அவ்வைக் கிழவி இப்படி பாடி வைத்திருக்கிறார்.
"இட்டார் பெரியோர் இடாதோர் இழி குலத்தோர்பட்டாங்கில் உள்ளபடி"
- ஈழத்துப் பாடகர் தேனிசை செல்லப்பா சொல்ல நேரில் கேட்டவர் தோழர் லீனாராய், ஜெர்மனி
Wednesday, May 30, 2007
முண்டச்சி நடிக்கலாமா?
Posted by
லக்கிலுக்
at
8:25 PM
19
comments
Labels: பெரியார்
Wednesday, May 23, 2007
தந்தை பெரியார் - வாழ்க்கை வரைபடம் - 2
தன்னலமற்ற சமூகத் தொண்டுகள்
ஈரோடு நகரில் பெயர் பெற்ற செல்வச் செழுமையுள்ள ஒரு வணிகராகத் திகழ்ந்த நிலையில் தன்னலம்அற்ற சமூகப் பணிகள் ஆற்றும் பொது வாழ்க்கையிலும் பெரியார் அடிவைத்தார்.
ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி: பிளேக் எனப்படும் கொடுமையான தொற்றுநோய் ஈரோட்டைத் தாக்கியது. அதனால் நூற்றுக்கணக்கான மக்கள் மடிந்தனர்; ஆயிரக் கணக்கானோர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டம் பிடித்தனர். ஆனால் மற்றப் பணக்கார வணிகர்களைப் போல, தமது சொந்த பிறந்த நகரைத் துறந்து வெளியேறவில்லை உயர்ந்த பண்பாளரான இந்தப் பெருமகன். பிளேக் நோய் தங்களைத் தொற்றிக் கொள்ளுமோ என்னும் அச்சத்தில் இறந்தவர்களைத் தொடாமலே அவர்களின் நெருங்கிய உற்றார் உறவினரே ஒதுங்கி விலகிவிட்ட பொழுதும், இவரோ தன் தோழர்களுடன் அந்தச் சடலங்களைத் தம் முதுகின்மீதே சுமந்து சென்றார் சுடுகாட்டுக்கு!
ஈரோடு கடைத் தெருவில் உள்ள மற்ற வணிகர் அனைவரிடமும் எல்லையற்ற செல்வாக்கை இவர் பெற்றிருந்தார். வணிகர்களுக்கு இடையே வெடிக்கும் சண்டைகளை நடுநிலையோடும் நீதியுணர்வோடும் இவர் தீர்த்து வைத்தார்.
தமிழ்ப் புலவர்களுடன் நட்புறவு
1905-06
பவுத்த நெறி மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளால், பார்ப்பனரின் இந்து மதத்தையும் சாதி முறையையும் கடுமையாகக் கண்டித்தார் ஆதிதிராவிடரான பண்டிதமணி அயோத்திதாசர் என்னும் தமிழ் அறிஞர். இவரது (பெரியாரின்) இளமைக் காலத்தில் அவர் இவரைக் கவர்ந்தார்.
கரூர் நகரில் புலவர் மருதையா பிள்ளை என்னும் தமிழறிஞர் வாழ்ந்தார். பார்ப்பனர் பரப்பிவந்த இந்து மதம், சாதி முறை, இதிகாசங்களின் கற்பனைப் புரட்டுக் கதைகள், வேத சாத்திரங்கள் ஆகியவற்றின் மீது அவர் தொடுத்த கடுமையான கண்டனக் கணைகளும், அறிவுக் கூர்மையான வாதங்களும் கரூர், ஈரோடு போன்ற நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த மிக எளிய நாட்டுப்புற மக்களையும் கூட கவர்ந்தன; அவரது நெஞ்சார்ந்த நட்புறவு பெரியாரின் உள்ளத்தில் நாத்திகம் என்னும் கடவுள் மறுப்புக் கோட்பாட்டை விதைப்பதிலும், ஊடுருவும் நுண்ணறிவுப் பகுத்தறிவுச் சிந்தனையாளராக இவரை உருவாக்குவதிலும் தலையாய பங்களிப்பைத் தந்தன.
மற்றொரு தமிழறிஞரான துறவி கைவல்யம் அடிகளாரின் உள்ளார்ந்த நட்புறவும் பெரியாரின் பகுத்தறிவுப் பார்வைக்குச் செழுமை சேர்த்தது. பொறியாளர் பா.வே. மாணிக்க நாயக்கர் போன்ற கல்வியாளர்களும் மிக உயர்ந்த அரசு அதிகாரிகளும், இவருடைய முற்போக்குக் கருத்துகளால் கவரப்பெற்று இந்த ஈரோடு வழிகாட்டிப் பெருவிளக்குடன் நட்புறவு கொண்டனர்
1909
ஒன்பது வயதிலேயே குழந்தைத் திருமணம் செய்யப்பட்டுக் கணவனை இழந்த கைம்பெண் ஆகிவிட்டார் இவர்தம் தங்கையின் மகள். தம் குடும்ப உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்குப் பணிந்துவிடாமல், அவரது மறுமணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார் இவர்.
இந்திய விடுதலை இயக்கத்திற்காகத் தியாகங்கள்
1918
பெரியார் ஈரோடு நகராட்சியின் தலைவர் ஆனார். இந்து மதத்தின் மீதும் சாதிமுறை மீதும் குறிப்பாக, திராவிட இனத்தை அடக்கி ஒடுக்குவதற்காகப் பார்ப்பனர் திணித்த கொடிய தீண்டாமை மீதும் இவர் அழுத்தமான வெறுப்புக் கொண்டபோதிலும், இவருடைய தடம்புரளாத நேர்மையும் தலைசிறந்த நிருவாகத் திறனும் பல்வேறு பொதுத் துறை அமைப்புகளில் எண்ணற்ற பதவிகளைப் பரிசுகளாக ஈட்டித் தந்தன இவருக்கு.
ஆங்கிலேயர் ஆட்சி, சிறப்பு அறமன்ற நடுவராக (கவுரவ மாஜிஸ்டிரேட்) இவரை அமர்த்தியது.
மாவட்டக் கழகம், வட்டக் கழகம், நகர வங்கி, மதத் தேவ°தான அறக்கட்டளை, பொது நூலகம், போருக்கு ஆள் தேர்வுக்குழு, வேளாண்மையாளர் சங்கம், வணிகர் சங்கம், மகாஜன பள்ளி நிருவாகக்குழு - இப்படிப் பல அரசுத்துறை - மற்றும் தனியார் துறை அமைப்புகளில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் - என்றெல்லாம் 29 சிறப்பு நிலைப் பதவிகளை இவர் ஏற்றிருந்தார்.
எண்ணற்ற இன்றியமையாத நல்வாழ்வுத் திட்டங்கள் இவரால் செம்மையாக நடைமுறைப் படுத்தப்பட்டன. குறிப்பாக, குடிநீர்த் திட்டம் திறமையாகச் செயல்முறைக்கு வந்தது. பெரியார் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்த பொழுது, பின்னாளில் இந்தியாவின்‘கவர்னர் ஜெனரல்’ ஆன திரு. சி. இராசகோபால ஆச்சாரி யாருக்கும் (இராஜாஜி) இவருக்கும் இடையே நட்புறவு மலர்ந்தது.
1919
திரு. பி. வரதராசுலு நாயுடு, திரு. சி. இராசகோபால ஆச்சாரியார் ஆகியோர், ‘மகாத்மா’ காந்தி வழி நடத்தும் தேசிய காங்கிரசுக் கட்சியில் சேருமாறு இவரை விரும்பி வேண்டிக்கொண்டனர். ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியை விலக்கி விட்டுக் காங்கிரசுக் கட்சியில் உறுப்பினராகப் பெரியார் தம்மை இணைத்துக் கொண்டார்.
1920
ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து ‘மகாத்மா’ காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் மிக்க ஆர்வத்துடன் இவர் ஈடுபட்டார். அந்தத் தலைவரின் எழுச்சி அழைப்பை ஏற்று, தாம் மேற்கொண்டிருந்த 29 பொதுத்துறைப் பதவிகள் அனைத்தையும் துறந்தார்.
ஒரு பவுன் விலை உருபா 10 (பத்து) கூட விற்காத அந்தக் காலத்தில் ஆண்டுதோறும் உருபா 20,000 ஈட்டி வந்த தொழில் நிறுவனத்தையே மூடிவிட்டார்; குடும்ப வணிகத்தையே துறந்தார். ஈரோட்டில் பிறப்பிக்கப்பட்ட 144 சட்டப் பிரிவு தடைச் சட்டத்தை மீறி முதன் முதலாக இவர் கைது ஆனார். மகாத்மா காந்தியடிகளைப் பெரியார் நம்பினார்; தம் தலைவராக ஏற்றுக் கொண்டார். எனவே அவர்தம் உண்மைத் தொண்டராகக் காந்தியடிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும் செயல் வடிவம் தர இவர் தொடங்கினார்.
அதற்கு ஓர் எடுத்துக்காட்டு: கதர் நூலைச் சக்கரத்தின் மூலம் இவர் நூற்றார். கதர்த் துணியையே அணிய வேண்டும் என்று காந்தியடிகள் கட்டளை விடுத்த உடனேயே விலை உயர்ந்த வெளிநாட்டுத் துணிகளை வீசி எறிந்துவிட்டு, கதர் ஆடையையே அணிய முற்பட்டார்.
அத்துடன், 80 வயதுள்ள தம் அன்னையார் உள்ளிட்ட தங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரையுமே கதர் ஆடை மட்டுமே உடுத்தக் கட்டாயப்படுத்தினார்! அதுவரை துய்த்த ஆடம்பரத்தைத் துறந்து, தமது வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு நிலையிலுமே எளிமைப் பண்பைக் கண்டிப்பான இயல்போடு கடைப்பிடித்தார்.
மதுவிலக்குக் கொள்கையை நிலைநாட்டியவர்
1921
மதுவிலக்குக் கொள்கை முதன் முதலில் உருவாக்கப் பெற்றது பெரியார் அவர்களின் இல்லத்திலேயே. காந்தியார் ஈரோடு வந்து இவரது இல்லத்தில் தங்கினார். அப்பொழுது, குடிபோதைக் கணவர்களால் மிகக்கொடிய துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மனைவியரின் தாங்கொணாத மனவலியைப் பற்றிப் பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாளும் அவரிடம் விளக்கிக் கூறினர்; மதுப் பொருள்களைத் தடை செய்யும் கொள்கையை வகுத்தே தீர வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தினர். இதற்காக ஒரு போராட்டத்தையே நடத்த வேண்டும் என்றும் வாதிட்டனர்.
போற்றத்தக்க இந்தக் கருத்தினை காந்தியார் உடனே ஏற்றுக் கொண்டார்.
மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு ஆங்கிலேயர் அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரசுக் கட்சியினர் கள்ளுக்கடை முன்னால் மறியல் செய்ய வேண்டும் என்று அறிவித்தார்.
மதுவிலக்குக் கொள்கையை நிலைநாட்ட காந்தியார் விடுத்த அந்தக் கட்டளையை நிறைவேற்று வதற்காக, தம்முடைய பரந்த தோப்புகளில் கள் உற்பத்திக்காக நின்ற 500-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களைப் பெரியார் வேரோடு வெட்டி வீழ்த்தினார்.
அந்த அளவுக்கு மதுவிலக்குக் கொள்கையிலும் உறுதியான பிடிப்புக் கொண்டிருந்தார் இவர். ஈரோடு நகரில் போராட்ட வீரர்களை வழிநடத்திச் சென்று கள்ளுக்கடை முன்னால் மறியல் புரிந்தார் பெரியார். இவர் கைது செய்யப்பட்டு, ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.
1922
இவர்தம் மனைவி நாகம்மாளும் தங்கை கண்ணம்மாளும் கிளர்ச்சியில் மிகத் துணிச்சலோடு குதித்தனர்; கள்ளுக்கடை முன்னால் மறியல் செய்வதற்குப் பெண் தொண்டர்களைத் தாங்களே வழி நடத்திச் சென்றனர். அந்தப் போராட்டத்தை நிறுத்திவிடுமாறு, காங்கிரசுக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் சிலர் ‘மாமனிதர்’ காந்தியாரை வேண்டிக் கொண்டனர். அப்பொழுது அவரோ கிளர்ச்சியை நிறுத்தும் அத்தகைய முடிவைத் தம்மால் மட்டுமே எடுக்க முடியாது என்றும் ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்மணிகளின் கைகளில்தான் அது இருக்கிறது என்றும் அவர் உறுதிபடவே உரைத்தார். பெரியார் அவர்களின் மனைவியும் தங்கையுமே அவர் குறிப்பாய் உணர்த்திய இரு பெண்மணிகள்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
1922
பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவர் ஆனார். திருப்பூரில் நடைபெற்ற அந்தக் கட்சியின் மாநில மாநாட்டில், திராவிட இனத்தைச் சேர்ந்த ஆதி திராவிடர் அனைவரும் வழிபாடு செய்ய கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். ஆனால் காங்கிரஸ் குழுவில் இருந்த பார்ப்பனர்கள் அந்தத் தீர்மானம் நிறைவேறாதபடி தடுத்துவிட்டனர்.
தங்களது ‘வருண தருமம்’ என்னும் சாதி முறையைக் கடைப்பிடிப்பதில் அவர்கள் காட்டிய வெறித்தனத்தால் மிகுந்த ஆத்திரம் அடைந்த பெரியார் - ஆரியரின் மனுசுமிருதி, இராமாயணம் முதலானவற்றை கொளுத்த வேண்டும் என்று அறிவித்தார். ஏனெனில், சாதி மற்றும் மூடநம்பிக்கை என்னும் கொடுமைகளால் திராவிட இனத்தையே அடக்கி ஒடுக்கி இழிவுபடுத்துவதற்குத் தங்கள் மதக் கருவிகளாக அவற்றை வஞ்சகமான பார்ப்பனர் பயன்படுத்தினர்.
1923
இந்து மதக் கோவில்களில் பார்ப்பனர் நடத்திய சுரண்டல் வேட்டைக்கு முடிவு கட்ட - பனகல் அரசர் தலைமையில் அமைந்த நீதிக் கட்சி அரசு, சென்னை மாகாண சட்ட மேலவையில், ஒரு சட்டத்தை நிறைவேற்றி இந்து சமய அறநிலையத் துறை அமைக்க வழி வகுத்தது.
தாம் ஒரு காங்கிரஸ் தலைவராக இருந்த போதிலும் கூட நீதிக் கட்சி ஆட்சி நிறைவேற்றிய அந்தச் சட்டத்தைப் பெரியார் ஆதரித்தார். இந்துமத ஆரியர்களால் ஒடுக்கி உருக்குலைக்கப்பட்ட திராவிட இனத்தவருக்குச் சமூக நீதியும், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளியல் போன்றவற்றில் சம உரிமைகளும் அடைய வேண்டும் என்பதில் உண்மையான அக்கறை கொண்டிருந்ததே பெரியார் அப்படி ஆதரித்ததற்குக் காரணம்.
சமூக நீதிக்கான போர் மறவர்
1924
அரசு ஆணை மூலம் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வகுப்புவாரி இட ஒதுக்கீடு கொள்கையைச் செயற்படுத்த நீதிக் கட்சி ஆட்சி மேற்கொள்ளும் நட வடிக்கைகளைப் பெரியார் பாராட்டினார்.
இந்து சாதியார்களில் மிகவும் கீழான அடிமைகளாக ஆதி திராவிடரை அடக்கி ஒடுக்குவதற்கு ஒரு வழிமுறையாகத் ‘தீண்டாமை’ என்பதைப் பார்ப்பனர் கடுமையாகக் கடைப்பிடித்தனர்.
அந்தக் கொடிய சாதி முறையை ஒழித்துக் கட்டும் பொருட்டு, கேரளா மாநிலம் வைக்கம் என்னும் ஊரில் தடைச் சட்டத்தையும் மீறி நெஞ்சுரத்தோடு போராட்டத்துக்குப் பெரியார் தலைமை ஏற்று நடத்தினார்.
வைக்கம் என்னும் அந்த நகரில், கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஈழவர் என்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் நடப்பதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை. எனவேதான் அங்கே உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டத்தைத் தொடங்கினர். அதற்குத் தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்பதற்குத் தமிழ்நாட்டிலிருந்து வருமாறு பெரியாருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இவரும் அங்கே அந்தக் கிளர்ச்சிக்குத் தலைமை ஏற்றார். அதனால் இரண்டு தடவைகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.
அந்த மறியல் போர் ஓர் ஆண்டுக்குமேல் நீடித்தது. பின்னர் தீண்டப்படாதவர்க்குத் தெருக்கள் திறந்துவிடப்பட்டன; நடப்பதற்கு அனுமதி கிடைத்தது. மனித உரிமைகளுக்காகத் துணிச்சலோடு நடைபெற்ற போராட்டமும், தியாகமும் வெற்றியை ஈட்டித் தந்தன. அதனால் ‘வைக்கம் வீரர்’ என்று பெரியார் அழைக்கப்பட்டார்..
1924 செப்டம்பர் 11
ஆங்கிலேயர் ஆட்சியில் அயல்நாட்டுப் பொருள்களின் புறக்கணிப்புக்கும், கதர்த் துணியையே உடுத்த வேண்டும் என்பதற்கும் முன்பு கொள்கை முழக்கம் (பிரச்சாரம்) செய்தார் என்பதற்காக இவர் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.
1924
திருநெல்வேலி அருகே சேரன்மாதேவி ஊரில் நடைபெற்ற தேசிய பயிற்சிப் பள்ளியின் விடுதி ‘குருகுலம்’ என அழைக்கப்பெற்றது. வ.வே.சு. அய்யர் என்னும் பார்ப்பனர் அதன் பொறுப்பினை ஏற்றிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் குழு ஏற்படுத்திய அந்தக் குருகுலம், திராவிட இனத்தைச் சேர்ந்த கொடையாளிகளின் நிதி உதவியாலும் இயங்கியது.
ஆயினும்அதன் பொறுப்பினை ஏற்றிருந்தவரோ அங்கே சாதி வேறுபாட்டைக்
காட்டினார். பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்று தனித்தனியே பிரித்து வைத்து உணவு பரிமாறப்பட்டது. திராவிட மாணவர்களைத் தனியே ஒதுக்கி வைத்துத் தமது ஆரிய இனப் பார்ப்பன மாணவர்களுக்கு மட்டும் தனிச் சலுகை காட்டிய வ.வே.சு. அய்யரின் சாதி வெறித்தனம் மிகுந்த அணுகு முறை பெரியாரிடம் ஆத்திரத்தையே மூட்டியது. ஆகவே மாபெரும் மனிதப் பண்பாளரான இவர், அந்தப் பார்ப்பனரின் கொடிய போக்கைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் செயலாளரான பெரியார் போர்கொடி தூக்கினார்.
1924 நவம்பர் திங்களில் திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாகாண மாநாட்டுக்கு இவர் தலைமை தாங்கினார்.
ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பனர்க்கு இணையாக வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் உயர்ந்த நிலைகளை எட்டவும், இழிந்த நிலைகளைத் துரத்தி அடிக்கவும் பார்ப்பனர் அல்லாதார் எனப்படும் திராவிடர் இனத்தவர்க்குக் கல்வியிலும் அரசு அலுவல்களிலும் வகுப்புவாரி இட ஒதுக்கீடு கட்டாயம் வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் தீர்மானத்தை 1920 ஆம் ஆண்டு முதலே காங்கிரஸ் மாநாடுகளில் முன்மொழிந்து கொண்டே இருந்தார் பெரியார்.
தாம் தலைமை ஏற்ற 1924 திருவண்ணாமலை காங்கிரஸ் மாகாண மாநாட்டிலும் அந்தத் தீர்மானத்தை இவர் கொண்டு வந்தார்.
ஆனால், பார்ப்பனர்களோ, திருநெல்வேலி (1920), தஞ்சாவூர் (1921), திருப்பூர் (1922), சேலம் (1923) ஆகிய காங்கிரஸ் மாநாடுகளில் செய்ததைப் போன்றே திருவண்ணாமலை (1924) மாநாட்டிலும் பெரியாரின் தீர்மானத்தைத் தோற்கடித்தனர்.
1924
சேலம் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் பொழுது பெரியார் ஓர் எச்சரிக்கை விடுத்தார்:
“ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே பார்ப்பனர் அல்லாதார் (திராவிடர்) வகுப்புவாரி இடஒதுக்கீடு உரிமையைப் பெற்றால் ஒழிய பார்ப்பனர் மேலாதிக்கத்தை ஒழிக்கவே முடியாது; திராவிட இனத்தவர், ‘பிராமணோக்கிரசி’ என்னும் பார்ப்பனீயக் கொடுங்கோல் ஆட்சியில் துன்பப்படத்தான் வேண்டும்” என்றார். இவ்வாறு ஒரு புதிய சொல்லாக்கத்தையே இவர் உருவாக்கினார்.
1925 - மே 2
‘குடி அரசு’ என்னும் தலைப்பில் ஒரு தமிழ் வார இதழைப் பெரியார் வெளியிட்டார். தாமே அதன் ஆசிரியராகவும் அமர்ந்தார். இந்து மதத்தின் கொடிய சாதி முறை மற்றும் மூடநம்பிக்கை மூலம் பார்ப்பனரால் அடக்கி அடிமைப்படுத்தப்பட்ட திராவிட இனத்தவருக்கு விழிப்புணர்ச்சி ஊட்டும் தன்மான எழுச்சிக் கொள்கைகளை அந்த இதழ் வாயிலாகப் பரப்பினார்.
துறவுக்கோலம் பூண்ட தமிழ் ஞானியும் கவர்ச்சி மிக்க சொற்பொழிவாளருமான, புகழ் பூத்த திருப்பாதிரிப்புலியூர் - ஞானியார் அடிகள் ‘குடி அரசு’ வார ஏட்டின் முதல் இதழை வெளியிட்டார்.
1925 - நவம்பர்
தமிழ் நூலாசிரியர், இதழ் ஆசிரியர், சொற்பொழிவாளர், தொழிலாளர் தலைவர் - என்றெல்லாம் பலதுறை அறிஞராகத் திகழ்ந்தவர் ‘தமிழ்த் தென்றல்’ திரு. வி. கலியாணசுந்தரனார் (திரு.வி.க.). அவரது தலைமையில் காஞ்சீபுரம் நகரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அதிலும் கூட, பார்ப்பனர் அல்லாதாருக்கு நூற்றுக்கு 50 விழுக்காடு வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார் பெரியார். வழக்கம்போலவே தந்திரம் மிக்க பார்ப்பனர், அது நிறைவேறுவதைத் தடுத்தனர். அந்தத் தோல்வி எல்லையற்ற ஆத்திரக்காரராக மாற்றியது பெரியாரை. எனவே, பார்ப்பனரால் முழுமையாகக் கைப்பற்றப்பட்டு ஆதிக்கம் செலுத்திய மாகாணத் தலைமைப் பொறுப்புக் குழுவைக் கொண்ட காங்கிரசுக் கட்சியிலிருந்து இவர் வெளியேறினார்.
அவ்வாறு காங்கிரசுக்கு விடை கொடுத்த பொழுது, தமது எதிர்காலத்தின் ஒரே வேலை - பார்ப்பனர் ஆதிக்க ஆட்சியைக் கொண்ட காங்கிரசை எல்லா வகைகளிலும் அடியோடு ஒழித்துக் கட்டுவதுதான் என்று பெரியார் இடி முழக்கத்துடன் சூளுரைத்தார். இவர் மாநாட்டை விட்டு வெளியேறிய உடனேயே, மிகப் பெரும் எண்ணிக்கையில் கட்சியின் முன்னணித் தலைவர்களும் தொண்டர்களும் இவரைப் பின்தொடர்ந்து வந்துவிட்டனர்.
(தொடரும்)
Posted by
லக்கிலுக்
at
5:50 PM
0
comments
Labels: பெரியார்
Friday, May 18, 2007
தந்தை பெரியார் - வாழ்க்கை வரைபடம் - 1

தந்தை பெரியார்
1879 செப்டம்பர் 17
இன்று தந்தை பெரியார் ஈ.வெ. இராமசாமி பிறந்தார்.
இவர் குழந்தையாய் மலர்ந்த இடம் ஈரோடு நகரம் (தமிழ்நாடு மாநிலம் - இந்தியா).
தந்தையார் வெங்கட்ட நாயக்கர், தாயார் சின்னத்தாயம்மையார்.
1885 வயது – 6
அந்த நாளில் வழக்கமாக நடைபெற்ற சிறிய திண்ணைப் பள்ளிக்கு இவர் அனுப்பப்பட்டார்.
1889 வயது - 10
அய்ந்து ஆண்டுகளிலேயே இவரது பள்ளிப் படிப்பு முடிவுற்றது.
1891 வயது - 12
தம் தந்தையாரின் வணிகத் தொழிலில் இவர் ஈடுபட்டார்.
1895
இவர்தம் பெற்றோரின் விருந்தோம்பலில் மகிழ்ச்சியுறும் வைணவ மத ஆசிரியர்கள் இவரது இல்லத்தில் ஆற்றும் உரைகளைக் கேட்பது இவருக்கு வழக்கம். திராவிட இனத்தவரை அடக்கி ஆள்வதற்காக ஆரிய இனத்தவரான பார்ப்பனர் இந்து மத தெய்வங்கள் பற்றிய பொய்யான புராணக் கதைகளைப் பரப்பினர். அவற்றின் முரண்பாடுகளையும் கற்பனை ஏமாற்றுகளையும் குறித்து, சிறு பையனாக இருந்த பொழுதே இவர் கேள்விகள் எழுப்பத் தொடங்கி விட்டார். இளைஞர் இராமசாமி உள்ளத்தில் பகுத்தறிவு - கடவுள் மறுப்புக் கருத்துகள் பூக்கத் தலைப்பட்டன.
1898
நாகம்மாள் என்னும் 13 ஆண்டுகள் நிறைந்த நங்கையை இவர் திருமணம்
புரிந்துகொண்டார். பக்தியாளரான தம் மனைவியை இவர், திருத்தினார். அவரது உள்ளத்தில் பகுத்தறிவுக் கருத்துகளை விதைத்தார்.
1900
பெண் குழந்தைக்கு இவர் தந்தை ஆனார். அதுவோ அய்ந்து மாதங்களிலேயே மடிந்தது. அதன் பின்னர் இவருக்குக் குழந்தையே பிறக்கவில்லை.
1904
தந்தையாரின் கடுமையான கண்டனத்தால் இவர் குடும்பத்தையே துறந்தார். முதலில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயவாடா நகருக்குச் சென்றார். அய்தராபாத், கோல்கத்தா நகரங்களுக்குப் போனார்.
அறிவுத் தெளிவு தந்த காசி அவமானம்
கங்கை ஆற்றின் கரையில் உள்ள இந்துக்களின் புனித நகரமான காசி நகரை (வாரணாசி) இவர் அடைந்தார். அங்கோ அன்ன சத்திரங்களில் இந்து மதத்தின் மற்றச் சாதியினர்க்கு அனுமதி மறுக்கப்பட்டுப் பார்ப்பனர்க்கு மட்டுமே தனிமதிப்புடன் உணவு வழங்கப்பட்டதால், திராவிட இனத்தவரான இவரால் எளிதாகச் சத்திரத்து இலவச உணவைப் பெற முடியவில்லை.
சில நாள்கள் மிகக் கடுமையாகப் பட்டினியால் வாடிய இந்த எழில் தோற்றம் உள்ள இளைஞர் இராமசாமி, வேறு எந்த நேரிய வழியும் தோன்றாத நிலையில், ஓர் அன்ன சத்திரத்தில் நுழைவதற்கு முயன்றார். ஆனால் இவரது கரிய மீசை காட்டிக் கொடுத்துவிட்டது. எனவே, வாயில் காவலாளி சத்திரத்திற்குள் இவர் நுழைவதைத் தடுத்ததுடன், முரட்டுத்தனமாகத் தெருவிலே இவரைத் தள்ளிவிட்டான். அந்த நேரம், சத்திரத்தின் உள்ளே விருந்து முடிந்து விட்டதால், எஞ்சிய சோற்றுடன் எச்சில் இலைகள் தெருவிலே வீசி எறியப்பட்டன. கடந்த சில நாள்களாக வாட்டிய கடும் பட்டினியோ, அந்த எச்சில் இலைச் சோற்றைத் தெரு நாய்களுடன் போட்டியிட்டுத் தின்பதற்குக் கட்டாயப்படுத்தியது இராமசாமியை.
அவ்வாறு அந்தச் சோற்றைத் தின்னும்பொழுதே சத்திரத்தின் வெளிப்புறச் சுவரில் பொறிக்கப்பட்ட எழுத்துகளை இவர் விழிகள் பார்த்தன. அவையோ இந்த உண்மையை வெளிப்படுத்தின: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பணக்கார வணிகரான திராவிட இனத்தவரே அந்தச் சத்திரத்தைக் கட்டியவர். ஆயினும், மிக உயர்ந்த சாதியாரான பார்ப்பனர், தங்களுக்கு மட்டுமே தனி உரிமை கொண்டதாக அதில் குடியேறிவிட்டனர்; இலவச உணவு உண்டனர்.
திடீரென்று இந்த இளைஞரின் மனத்தில் சில கேள்விகள் தீப்பொறிகளாகத் தெறித்தன.
“ஒரு திராவிட அறப்பணியாளர் பணத்தில் கட்டப்பட்ட சத்திரத்தில் திராவிட இனத்தவர் உணவு அருந்துவதைப் பார்ப்பனர் தடுப்பது ஏன்? திராவிடரைப் பட்டினிச் சாவுக்கே தள்ளும் அளவுக்குத் தங்களின் கொடுமையான சாதி முறையை விடாப்பிடியாகக் கட்டாயமாக நடைமுறைப்படுத்துவதற்காக இவ்வளவு இரக்கம் இல்லாமலும் மதவெறியோடும் பார்ப்பனர் நடந்து கொள்ள வேண்டுமா?”
இந்த வினாக்களுக்கு உரிய நியாயமான விடைகள் பெரியாரின் அறிவுக் கூர்மையான சிந்தனைக்குக் கிடைக்கவில்லை.
காசியில் துளி அளவும் இரக்கம் அற்றுப் பார்ப்பனர் இழைத்த அவமானம் பெரியார் உள்ளத்தில் ஆழமான காயத்தை உண்டாக்கிற்று. அதுவே ஆரிய இனத்தின் மீதும் அவர்களின் படைப்புகளான கணக்கற்ற கடவுள்கள் மீதும் அழுத்தமான வெறுப்பு
நெருப்பைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது.
மிக உயர்ந்த ‘புனித நகரம்’ ஆகப் பார்ப்பனரால் போற்றப்படுவதுதான் காசி என்னும் வாரணாசி. ஆயினும் அங்கே காணப்பட்ட மிகமிக அருவருப்பான ஒழுக்கக்கேடான நடவடிக்கைக் காட்சிகளும், பரத்தைத் தொழிலும் (விபச்சாரமும்), ஏமாற்றுதலும், பகற்கொள்ளையும், கெஞ்சிப் பிச்சை கேட்கும் கூட்டங்களும், கங்கை ஆற்றில் மிதந்து செல்லும் பிணங்களும் புனித நகரம் என அழைக்கப்படும் அந்தக் காசியை வெறுக்கும்படியாகவே பெரியாரைத் தூண்டின. அதன் விளைவாக, தமது துறவு வாழ்க்கை பற்றி எழுந்த மறு சிந்தனை, இவர் தமது குடும்ப வாழ்க்கைக்கே திரும்பிச் செல்வதற்கு வழி கோலிவிட்டது.
இவர் ஈரோடு திரும்பியதும், இவர்தம் தந்தையார் தமக்குள்ள வணிக உரிமைகள்
அனைத்தையும் இரண்டாவது மகனான இவருக்கே ஒப்படைத்தார். தமது மிகப்பெரிய நிறுவனத்திற்கும் ‘ஈ.வெ. ராமசாமி நாயக்கர் மண்டி’ என மறுபெயர் சூட்டிவிட்டார்.
(தொடரும்)
Posted by
லக்கிலுக்
at
4:10 PM
3
comments
Labels: பெரியார்
Tuesday, May 15, 2007
பெரியார் திரைக்காவியம் – சில துளிகள்!
• படத்தின் டைட்டில் கறுப்பு வண்ணத்தில் சிகப்பு எழுத்துக்கள் என திராவிடர் கழக கொடி நிறத்தில் மெல்லிய இசையுடன் ஆரம்பிக்கிறது.
• படத்தில் நகைச்சுவைக்கு என்று தனியான கேரக்டர்கள் எதுவும் இல்லை. உயர்சாதியினரின் அக்காலத்திய நடவடிக்கைகள் சித்தரிக்கப்படும் காட்சிகளே வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.
• தந்தை பெரியார் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் பல வரிசைக்கிரமமாக பதிவு செய்யப்படாமல் திரைக்கதையின் வசதிக்காக முன்பின்னாக மாற்றி படமாக்கப்பட்டிருக்கிறது.
• பின்னணி இசைக்கு அதிக வேலையில்லாத படம். பல காட்சிகள் இசையில்லாமலேயே நகருகிறது.
• தந்தை பெரியாருக்கு புத்திர பாக்கியம் இல்லை என்று பலர் கருதுவார்கள். அவருக்கு ஒரு மகள் பிறந்து ஐந்து மாதங்களிலேயே இறந்து விட்டதை இப்படத்தின் வசனம் ஒன்றின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
• நிறைய சம்பவங்களை காட்சிகளாக காட்டாமல் சிறு வசனங்கள் மூலமாக சொல்கிறார்கள். 94 ஆண்டுகள் வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளரை 3 மணிநேர படத்தில் குறுக்க வேண்டிய தர்மசங்கடம் இயக்குனருக்கு இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
• படத்தின் முன்பாதியில் காட்டப்படும் பெரியார் நம் இப்போதைய தலைமுறைக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவர். இந்தியாவிலேயே முதன்முறையாக வீடுகளுக்கு குழாய் மூலமாக தண்ணீர் வினியோகித்த முனிசிபாலிட்டி சேர்மன் தந்தை பெரியார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
• மதுவிலக்கு மறியல் போராட்டங்களின் போது தனக்கு சொந்தமான தென்னந்தோப்பு மரங்களை பெரியார் வெட்டி வீழ்த்தியதை காட்சியாக வைத்திருக்கலாம்.
• வைக்கம் போராட்டத்தின் போது பெரியாரை அழிக்க உயர்சாதி எதிரிகள் யாகம் வளர்க்கிறார்கள். யாகத்தின் பயனாக (?) எதிர்பாராவிதமாக திருவாங்கூர் மகாராஜா மரணமடைகிறார்.
• பெரியாரின் பிரச்சார வண்டியை வழிமறித்து தொண்டர் ஒருவர் தன் குழந்தைக்கு பெயர் வைக்கச் சொல்லி அய்யாவிடம் ஒரு ரூபாய் அளிக்கிறார். ஒரு ரூபாய்க்கு சுமாரான பெயர் தான் வைக்க முடியும். ரெண்டு ரூபாய் கொடுத்தால் சூப்பர் பெயர் வைக்கிறேன் என்கிறார் அய்யா. ரெண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு அய்யா வைக்கும் பெயர் “காமராஜி”
• பெரியாரின் இளமைக்காலம் வரையிலான காட்சிகளின் போது பெரியாராக நடிப்பவர் சத்யராஜ் என்ற உணர்விருக்கிறது. வெள்ளை தாடி வைத்த பெரியாராக காட்சிகள் மாறும்போது சத்யராஜ் என்ற நடிகர் ஒருவரையே மறந்து விடுகிறோம்.
• தந்தை பெரியார் தன் வாழ்க்கையில் அதிகமாக உச்சரித்த “பார்ப்பான்” என்ற வார்த்தை படத்தில் எங்குமே இடம்பெறவில்லை.
• திமுக ராபின்சன் பூங்காவில் உருவாகும்போது மேடையில் கலைஞர் கருணாநிதியும் இருப்பதாக காட்டியிருப்பது தேவையற்றது.
• அறிஞர் அண்ணா பெரியாரின் பத்திரிகை ஒன்றில் தலையங்கம் எழுதியபோது தடியில்லாமல் மாடி ஏறிச்சென்று அண்ணாவை பாராட்டுகிறார். பெரியார் முதுமை காரணமாக தடியை கையில் எடுக்கவில்லையாம். ஸ்டைலுக்காக தடியெடுக்க ஆரம்பித்தார் என்று நண்பர் ஒருவர் சொன்னார்.
• பெரியாரின் ரஷ்ய பயணத்தின்போது ரஷ்ய அதிபர் ஸ்டாலினுடனான அவரது அப்பாயிண்ட்மெண்ட் கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் கைவிடப்பட்டிருக்கிறது.
• பெரியாரின் இறுதி ஊர்வலத்தின் ஒரிஜினல் காட்சிகளை க்ளைமேக்ஸில் இணைத்திருப்பது சிறப்பு.
• இப்படத்தில் தந்தை பெரியாரின் வாழ்க்கையில் வந்த பல கட்டங்கள் இல்லாதிருக்கலாம். எனினும் இப்படம் தந்தை பெரியாரை சாமானியனுக்கும், விளிம்பு நிலை மனிதனுக்கும் எளிய அறிமுகத்தை கொடுக்கும் நோக்கத்துடன் சரிவிகிதத்தில் வணிகநோக்கும் கலந்து எடுக்கப்பட்டிருக்கிறது.
• படம் எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு என்னால் பதில் அளிக்க இயலவில்லை. ஆனந்த விகடன் இதழே இந்த வரலாற்றுக் காவிய முயற்சிக்கு யாராலும் மதிப்பெண் இட முடியாது என தெரிவித்திருக்கிறது.
Posted by
லக்கிலுக்
at
11:41 AM
5
comments
Labels: பெரியார் திரைக்காவியம்